இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டி நடக்க நடக்க ,கால் வலி அதிகரித்தது எனக்கு. அவசரமாக கிளம்பியபோது காலை நிலைக்காலில் தட்டிக்கொண்டதால் வந்த விளைவு. அம்மாதான் தனது புடவையைக் கிழித்து கட்டு போட்டு விட்டாள் . “ஏண்டா, இன்னிக்கி ஒரு நாள் வேலைக்கு போகலைன்னா என்ன. அடி பலமா பட்டிருக்கே”, என்று என்னை அனுப்ப தயங்கினாள்.
மறுத்துவிட்டேன். பலமான மறுப்புதான். ஏனெனில், இன்று நான் போகவில்லையென்றால், எப்படி அவளைப் பார்ப்பது ? இருபது நாட்களாகத்தான் அந்த இடத்தில், நான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்பது மணிக்கு பேருந்து நிலையத்தில் வந்து நின்றால், பத்து நிமிடத்தில் எல்லாம் அவள் தரிசனம் தருவாள் .அவள் வீடு எதிரில் தானே இருந்தது. அதனால், வாசலில் வந்து நின்றாலே, நல்ல தரிசனம் கிடைக்கும்.
சில நேரங்களில் நான் சிரிக்கும்போது அவளும் சேர்ந்து சிரிப்பாள். நான் அவளைப் பார்த்து புன்னகைத்தால், உடனே உள்ளே ஓடி விடுவாள். துறுதுறுவென்ற பார்வை எல்லா இடத்தையும் சுற்றி வந்துவிடும்.
எனக்கு அவள் மீது ஏனோ ஒரு ஈர்ப்பு. முன்பெல்லாம் பேருந்து தாமதமாக வந்தால் மனதுக்குள் வைது கொள்பவன், இப்பொழுதெல்லாம் பேருந்து சீக்கிரம் வந்தால் திட்டித்தீர்க்கிறேன். எல்லாம் அவள் தரிசனத்திற்காகத்தான்.
இதோ, பேருந்து நிறுத்தம் வந்து விட்டது. காலில் ரத்தம் கசிதல் நின்றிருக்க வேண்டும். ஏனெனில், கட்டி விடப்பட்ட துணி சற்று இருகியிருந்தது. எதிரிலிருந்த வீட்டைப்பார்த்தேன்.ம்கூம், அவள் வெளியே வரக் காணோம். கால் வலியோடு மன வலியும் அதிகரித்தது எனக்கு.
சற்று நேரத்தில் ‘ஓ’ வென்ற ஓலம் கேட்டது. அந்த வீட்டிலிருந்து அவள் வெளியே ஓடினாள். அவள் ஆடைகள் அங்கங்கு கிழிந்திருந்தன. தலைவிரிகோலமாய் கத்திக்கொண்டே ஓடினாள். தெருவைச் சுற்றி சுற்றி ஓடினாள். அவள் பின்னே ஒரு பெண்மணி, அவள் தாயாக இருக்க வேண்டும், “அய்யோ ! கடவுளே இந்த பைத்தியக்காரப் பெண்ணை வைத்துக் கொண்டு நான் என்னவெல்லாம் கஷ்டப்படப்போறேனோ ? ” என்று அழுது கொண்டே தலையில் அடித்தபடி ஓடினாள். நெஞ்சம் கனத்தது. அவள் ஓடும்போது , என்னை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நான் இன்று சிரிக்கவில்லை. “இந்த நிலையிலும் அவள் என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாள்.அதுவும் திரும்பித்திரும்பி”. யாமறியோம் பராபரமே.
Comments
Post a Comment