தேங்காய்த் துருவியில் ஒரு கண்ணும் , பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகன் முத்தேஷின் மீது ஒரு கண்ணுமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் பொன்னி.
அன்று விநாயகர் சதுர்த்தி. அதனால், காலையிலேயே குளித்து முடித்து விட்டு தான் வேலை செய்யும் வீட்டுக்கு வந்து விட்டாள். வேலை அதிகமாயிருக்கும், அதை முடித்து வர நேரமாகிவிடும் என்பதால் தன் மகனையும் கூடவே கூட்டி வந்து விட்டாள்.
கொண்டு வந்திருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் குழந்தை. அவ்வப்போது அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டான்.
முதலாளியம்மா, பார்வதி சுறுசுறுப்பாக சுற்றிக்கொண்டிருந்தாள். அவள் பேரன் பேத்தியெல்லாம் தாம்பரத்தில் இருக்கிறார்கள். எப்போதாவது “என் பேரப்பிள்ளைகள் என்னுடன் இல்லையே” என்று தன் ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்வாள். இன்றோ, அவர்களும் ஊரிலிருந்து வந்துவிடவே காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருக்கிறாள்.
“மோதகம், அவல், பொரி எல்லாம் ரெடி. நீ மட்டும் தேங்காய் துருவி முடிச்சா , பஞ்சாமிர்தத்துல தூவிட்டு நெய்வெத்தியம் செஞ்சிடலாம். கொஞ்சம் வேகமா வேலையைப்பாரு ” என்று சொல்லிவிட்டு சமையல்கட்டைவிட்டு வெளியே போனாள் .
பக்கத்திலிருந்த முத்து “அம்மா” என்று மழலை மொழியில் அழைத்து , அவள் துருவிக் கொண்டிருந்த தேங்காய்யைப்பார்த்து கை நீட்டினான்.
குழந்தைக்கு பசித்திருக்கும் போலும். முந்தைய நாள், அவர்கள் சண்டையின் மத்தியில் அலறத்தொடங்கிய குழந்தை அப்படியே தூங்கி விட்டான். ”இரவு வெறும் வயிராகத் தூங்கி விட்டான் . காலையிலும் இதுவரை எதுவும் சாப்பிடவில்லை. பசியால் கேட்கிறான் போலும்” என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் தேங்காய்யை எடுத்து அவன் கையில் தந்தாள் பொன்னி.
சட்டென்று ஓடிவந்து அதை தட்டி விட்டாள் பார்வதி. ”நெய்வேததியம் முடியாம யாரும் சாப்பிட்டு எச்சில் பண்ணக்கூடாது. என்ன காரியம் பண்னப்போன நீ” என்று கடிந்து கொண்டாள் அவள். "ஞாபகம் இல்ல பெரியம்மா" என்று சொல்லிவிட்டு துருவிமுடித்த தேங்காயை அவளிடம் ஒப்படைத்தாள்
கையில் கிடைத்தத்தை யாரோ தட்டி விட்ட ஏமாற்றத்தில் குழந்தையின் கண்கள் நிரம்பின. பொன்னிக்கு அழுகையாக வந்தது. அடக்கிக்கொண்டு, முத்துவை எடுத்து சமாதானம் பண்ணினாள்
கொஞ்ச நேரத்தில் பூஜை மணியின் சத்தம் கேட்டது. ” சாமிக்கு நெய்வேத்தியம் நடந்து கொண்டிருந்தது.”
இலையில் எறும்பு வந்து விடவே ”பிள்ளையார் வந்துட்டார் பாருடா” என்று தன் பேரனிடம் சொன்னாள் பார்வதியம்மா. சுவரில் மாட்டியிருந்த படத்தில் மாலையுடன் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். அவர் காலடியில், கொழுக்கட்டை ஒன்றை மூஞ்சுறு கொரித்துக் கொண்டிருந்தது.
குழந்தை, அழுகையை அடக்க முடியாமல் பெருமூச்சு விட்டான்.
இலையில் எறும்பு வந்து விடவே ”பிள்ளையார் வந்துட்டார் பாருடா” என்று தன் பேரனிடம் சொன்னாள் பார்வதியம்மா. சுவரில் மாட்டியிருந்த படத்தில் மாலையுடன் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். அவர் காலடியில், கொழுக்கட்டை ஒன்றை மூஞ்சுறு கொரித்துக் கொண்டிருந்தது.
குழந்தை, அழுகையை அடக்க முடியாமல் பெருமூச்சு விட்டான்.
Comments
Post a Comment