அந்த காலத்தில், ட்ராய் நகரத்தில், அப்பொல்லோ என்பவன் புகழ் பெற்று வாழ்ந்து வந்தான். ட்ராய் நகர மக்கள் அவனுக்காக ஒரு கோவிலே கட்டி வைக்கும் அளவுக்கு அவன் புகழ் உச்சியில் இருந்தது.
ஒரு நாள், தனது கோவிலை பார்வையிடுவதற்காக சென்றிருந்தான், அப்பொல்லோ. அவன் மனதுக்கு அது இதமாக இருந்தது . கோவிலில் ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வந்தவன் கண்ணில் பட்டாள், கசண்டரா. அங்கு வேலை செய்து வந்த அந்த அழகான , எளிமையான , பெண்ணின் மீது நொடிப் பொழுதில் காதல் வயப்பட்டான் அப்பொல்லோ.
கசண்டராவை அணுகினான். தன் காதலை வெளிப் படுத்தினான். அவள் தனக்கு ஒரு முத்தம் தந்தால், யாருக்கும் கிட்டாத அரிய வரத்தை அவளுக்கு தருவதாக வாக்களித்தான் . பின்னால் வரப் போவதை முன்னாலேயே அறியக்கூடிய தீர்கதரிசன வரமே அது. முதலில் தயங்கிய கசண்டரா சற்று நேரத்தில் ஒப்புக் கொண்டாள். இப்படி ஒரு வீரன், தன் முன்னால் வந்து நின்று கேட்டதாலோ, அல்லது அவளுக்கும் அவன் மீது காதலோ என்னவோ. காதல், அவன் மீதா அல்லது வரத்தின் மீதா என்பதும் கேள்விக்குறியே .
கண்டிப்பாக ஒரு பெண் , முதலில் முத்தம் தர தயங்குவாள் என்று நினைத்த அப்பொல்லோ, சிரித்தபடியே அவளுக்கு அந்த வரத்தை அருளினான். அந்த கணத்திலிருந்தே, அவளால் வருங்காலத்தை பார்க்க முடிந்தது. அவள் வருங்கலத்தில் அப்போல்லோவைப் பார்த்தாள். அவன் ட்ராய் நகரத்தை அழிக்க கிரேக்கர்களுக்கு உதவி செய்யப்போவதையும் பார்த்தாள் . அவள் கண்கள் கலங்கின . நெஞ்சம் கனத்தது .
அந்த நேரத்தில், சரியாக, முத்தம் பெறுவதற்காக, தன் சிரத்தைத் தாழ்த்தினான், அப்பொல்லோ. கோபத்தில் அவன் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தால் கசண்டரா . அப்போல்லோவுக்கு கோபம் தலைக்கேறியது. வரத்தையும் வாங்கிக் கொண்டு, தன்னையும் அவமானப் படுத்திய கசண்டராவை “என்ன செய்தாலும் தகும்” என்று நினைத்தான். ஆனால் , கொடுத்த வரத்தை திரும்ப பெற முடியாதே ?
சற்று நேரம் யோசித்த அப்பொல்லோ , அவளுக்கு ஒரு சாபத்தையும் அளித்தான். ” உன்னால் வருங்காலத்தை பார்க்க மட்டுமே முடியும். நீ சொல்வது எதையும் எவருமே நம்ப மாட்டார்கள் ” என்பதே அந்த சாபம்.
பலித்தது . அவன் அளித்த வரமும் பலித்தது . சாபமும் சேர்ந்து பலித்தது. கிரேக்கர்கள் ட்ராய் நகரத்தை அழிப்பதற்காக அனுப்பிய ட்ரோஜன் குதிரையைப் பற்றி முன்பே அவள் சொன்னாள் . மன்றாடியும் பார்த்தாள். அவள் பேச்சை எவருமே நம்பவில்லை. ட்ரோஜன் குதிரையால் ட்ராய் சாம்ராஜ்யமே அழிந்த கதை எல்லோரும் அறிந்ததே.
குறிப்பு: கிரேக்கர்களால் ட்ராய் சாம்ராஜ்யம் அழிந்தது.
“வருங்காலத்தை கணித்தேன்” ,என்று பொய்யாக குறி சொல்லுபவர்களுக்கு, கசண்டரா காம்ப்ளெக்ஸ் என்று கூறுவர்.
Comments
Post a Comment