கிரேக்கர்களின் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றது அட்லாண்டாவின் கதை. ஆணும் பெண்ணும் சரி சமம் என்ற கோட்பாடு பல வருடங்களுக்கு முன்னரே இருந்து வந்ததை பறைசாற்றும் கதை இது.
அட்லாண்டா, ஒரு அழகு தேவதை . மின்னல் வேகத்தில் ஓடும் திறமை வாய்ந்தவள். தூரத்தில் தெரியும் மானையும் மிளாவையும் துல்லியமாக ஈட்டியால் வீழ்த்தி வேட்டையாடும் வளமை பெற்ற வன தேவதை . கிரேக்க நாட்டின் எந்த வீரனாலும் தோற்கடிக்கப்படாத வீரத்திருமகள்.
இவள் கதையை முதலில் படித்தபோது , எனக்கு நினைவுக்கு வந்தது “கருத்தம்மா ” படம் தான்.
லாசாஸ் என்ற அரசனுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை தான் இந்த அட்லாண்டா. ‘பெண் தானே’ என்ற அலட்சியத்தில் இவளைக் காட்டில் கொண்டு போட்டு விட்டான் கொடூர அரசன். யாருமற்ற காட்டில் தனியாய் கதறி அழுது கொண்டிருந்தது குழந்தை. இந்த கூக்குரலைக் கேட்டு மனம் வலித்த கரடி ஒன்று குழந்தையைத் தூக்கி வளர்த்தது.
சிறிது நாட்கள் கழித்து அந்த காட்டுக்கு கூட்டமாக வந்த வேட்டயர்களின் கண்ணில் பட்டாள் அட்லாண்டா. அழகுச் சிறுமியின் அன்பில் வயப்பட்டு அவளைத் தங்களுடன் அழைத்துச் செல்ல பிரியப்பட்டார்கள் அவர்கள். கரடியும் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தது . பின்னர் அந்த வேட்டயர்களின் குகையில் வளர்ந்து வந்தாள் அவள். வேட்டையர்கள் ஒவ்வொருவரும் அவளைத் தங்கள் மகளாகவே கருதி வந்தார்கள். அன்போடு சேர்த்து திறமையையும் வளர்த்தார்கள். உருண்டோடிய வருடங்களில் துல்லியமாக வேட்டையாட கற்றுக்கொண்டாள் அட்லாண்டா.
– தொடரும்
Comments
Post a Comment