சாந்திநகரும் செம்பருத்தியும்

ஏனோ தெரியவில்லை , செம்பருத்திப்பூவின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். பளிச்சென்ற அதன் நிறமா ? பெரியதான அளவா ? இல்லை நான் முதன்முதலின் செடியில் பார்த்த மலர் அதுதான் என்பதாலா ? இன்னும் புரியவில்லை . ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் , நான் ஒரு செம்பருத்தி பைத்தியம் . யாரும் கேலி செய்யவில்லை என்றால், மல்லிகை , பிச்சி போல அதையும் தலையில் வைத்துக்கொள்ள தயார் தான்.
செம்பருத்தியைப் பற்றி பேச வந்த இடத்தில என்னைப் பற்றி யார் கேட்டார்கள் ?
மறுபடியும் செம்பருத்திக்கே வந்து விடலாம். நான் பல நாட்களாக சிகப்பு மட்டுமே செம்பருத்தியின் நிறம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். இதில் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, ஏனென்றால் , எனக்கு தெரிந்த ஒரே செடி செம்பருத்தி . அந்த செடியில் பூத்த மலர்கள் அத்தனையும் சிகப்பு .
ஆக செம்பருத்தியின் நிறம் சிகப்பு  !!!!!!!! இதெல்லாம் சாந்தி நகர் போகும்வரை மட்டும்தான் .
சாந்தி நகருக்கும செம்பருத்திக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ?
எனக்கு பத்து நாட்கள் விடுமுறை கொடுத்து  கையில் ‘சிம்லா” வுக்கு திக்கெட்டும் கொடுத்தால் கூட , நான் போக நினைக்கும் இடம் அதுவாகத்தான் இருக்கும் . திருநெல்வேலியின் ஒரு மூலையில் அமைதிக்கு பஞ்சமின்றி திகழும் ஒரு இடம் அது . ‘வீட்டுக்கு ஒரு மரம்’ வளர்க்கச் சொன்னால் , ‘ஒன்பது மரம்’ வளர்க்கும் அளவுக்கு தாராள மனம் படைத்த மக்கள் வாழும் இடமோ !! என்னவோ !!!! கோடையில் கூட அங்கு உஷ்ணத்தை உணர்ந்ததில்லை !!!
எங்கள் சொந்த வீடு அங்கு தான் இருக்கிறது . எட்டு வயதில் குடி பெயர்ந்தபோது ” சாந்தி நகரும் செம்பருத்தியும் ” எனக்கு இத்தனை பிடித்தமானவையாக ஆகுமென்று நான் எதிர்பார்க்கவில்லை . தெருக்களின் இரு புறமும் பூத்துக் குலுங்கும் செம்பருத்தியை வேடிக்கைப் பார்ப்பதற்காக அதிகாலையில் எழுந்திருக்க வேண்டியிருந்தது.  ஏன், மற்ற நேரம் வேடிக்கை பார்த்தால் என்ன என்று கேட்கிறீர்களா ?? தெருவின் இருபுறமும் வேடிக்கைப் பார்த்து சென்றால் எதிரில் வரும் சைக்கிளிலோ , பைக்கிலோ விழுந்து அடி பட்டு , யார் வேதனை அனுபவிப்பது ??
அழகான ரத்தச்சிவப்பு ,
ஆட்கொள்ளும் இளமஞ்சள் ,
இதழோர இளஞ்சிவப்பு ,
ஈரமான ஆரஞ்சு,
ஊதா, வெண்மை, மஞ்சள், கடுஞ்சிவப்பு
அடி அம்மா !!!
இத்தனை நிறங்களா உனக்கு ?
அடுக்கடுக்காய் ,
இரு அடுக்காய்,
ஒரே வரியாய்,
மென் தூவலாய்,
இத்தனை விதங்களிலா ?
என்னை முதல் கவிதை எழுத வைத்த
செம்பருத்தி,
நீ பூத்தாலும் காய்ப்பதில்லையாமே,
யாரடி சொன்னது ?
உன்னை மலடியென்று ?
என் கவிதை கூட,
உன் குழந்தைதான் !!!
அனால் முதல் குழந்தையா என்று எனக்கு தெரியாது ……..
எத்தனை மனங்களை கொள்ளையடித்தாயோ !!
யாருக்கு தெரியும் ?
யாரும் கேலி செய்யவில்லை என்றால்,
மல்லிகை , பிச்சி போல
உன்னையும் என் தலையில் வைத்துக்கொள்ள தயார் தான் !!
எங்கள் வீட்டைப் பார்த்தால் எனக்கே பாவமாக இருந்தது. ஒப்புக்கு கூட ஒரு செம்பருத்திச் செடியில்லை. எனக்கோ செம்பருத்தியை எப்படி நட்டு வளர்ப்பதென்று தெரியாது. அப்பா அம்மாவும் இதில் ஆர்வம் காட்டுவதாக இல்லை. இவர்கள் தவிர எனக்கு அந்த ஊரில் தெரிந்த பெரியவர்கள் பட்டியல் மிகவும் சிறியது. அவர்களில் பரிட்சயமானவர் என்பது அண்ணாமலை பெரியப்பா மட்டும்தான். ஆனால், அவர்கள் முன்னால் வாயைத் திறப்பதற்கே பயப்படும் பெண்ணாக அல்லவா இருந்தேன் அப்பொழுது !!!!!!!!!!
“எனக்கு ஒரு செம்பருத்தி செடி வேண்டும் ” என்று சொன்னால் கொடுத்து விடப் போகிறார்கள். அவர்கள் வீட்டில் தான் அத்தனை விதத்திலும் தலைக்கொன்று உண்டே. கேட்கப் போன இடத்தில் என் வாயிலிருந்து வந்ததென்னவோ காற்று மட்டும்தான்.
உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் மதியத்தில் ஒரு யோசனை தோன்றியது !! செம்பருத்தி விதையைத் தூவினால் என்ன என்று !! வீட்டு முன் மனையில் அழகாக ஒரு குழி தோண்டி, ஆற்று மணல் பாதி செம்மண் மீதி கலந்து, தண்ணீர் தெளித்து விதையைத் தூவிவிட்டு காத்திருந்தேன். நாட்கள் சென்றதே தவிர ஒரு தளிர் கூட விடவில்லை . கொஞ்சம் விட்டால் அழுது விடலாம் போல இருந்தது . ஏழு நாட்கள், சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, யாருடனும் பேசவில்லை. “கடவுளே, எப்படியாவது என் செம்பருத்தி விதை முளைத்து விட வேண்டும் “, இதுதான் என் பிரார்த்தனை.  எனக்கு உதவி செய்த பாவத்திற்கு என் தம்பியும் என்னுடன் சேர்ந்து வேண்டிக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் மாலை வேலையில், விதை தூவப்பட்ட இடத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம் நானும் என் தம்பியும் . அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த பெரியப்பாவின் கண்களில் நாங்கள் பட
” ஏன் இப்படி அந்த இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ? எதையாவது தொலைத்துவிட்டீர்களா ?” என்று கேட்டார்கள்.
நான் வழக்கம்போல மௌனம் சாதித்தேன்.
” செம்பருத்தி விதை இன்னும் முளைக்கவில்லை. அதான் அக்கா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள்” என்றான் தம்பி.
அவர் சிரித்தார். அன்று வரை அவர்கள் சிரித்து நான் பார்த்ததே இல்லை. அப்பா அம்மாவும் அவருடன் சேர்ந்து கொள்ள அந்த சிரிப்பு நீடித்தது . விழுந்து விழுந்து சிரித்தனர். எனக்கோ அர்த்தம் புரியவில்லை.
” உன் மகளுக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது செம்பருத்தி விதை ? கேட்டு எனக்கும் கொஞ்சம் வாங்கிக்கொடு. எங்கள் ஊரில் கிளை ஒடித்து தான் செம்பருத்தி நடுவார்கள். ” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்கள் .
சிரிப்பில் என் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
“எனக்கு செம்பருத்தி செடி வேண்டும். தருவீர்களா ?? “, கேட்டேன்.
பிறகென்ன. அவர்களிடம் வாங்கிக்கொண்ட ஒரு செம்பருத்தி குச்சியும் , எப்படி வளர்க்க வேண்டுமென்ற ஆலோசனையுமாக வீடு வந்து ஒரு செம்பருத்தி தோட்டமே வளர்த்தது தனி கதை.
இப்படி இரண்டு மணி நேரம் செலவு செய்து எழுத வேண்டுமென்றால், ” சாந்தி நகரும் செம்பருத்தியும் ” என்னை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்று தெரியவில்லையா ???
இப்படி வீட்டுக்கு ஒரு பைத்தியம் இருந்தால் , ” வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்” என்ற வாக்கியமே தேவையில்லையே !!
பின்குறிப்பு:
செம்பருத்திச்செடிக்கு ஏது விதை என்று கேட்கிறீர்களா ? அதன் மகரந்தத் தூளை விதை என்று நினைத்திருந்திருக்கிறேன் அடியேன் !!

Comments