உணவு இடைவேளை !!

நாகர்கோவிலில் ஒரு துணிக்கடை .. மதியம் 1 மணி இருக்கும் .. தீபாவளிக்காக துணி வாங்கச் சென்றிருந்தோம் .. கவுன்டரில் நின்ற பெண்ணிடம் ஒவ்வொரு துணியாக எடுத்துக்காட்டச் சொல்லிக்கொண்டிருந்தோம், நானும் என் அம்மாவும் .. அவளுக்கு நிச்சயம் 18 வயதுக்கு மேல் இருக்காது.. அவள் மிகவும் சோர்வுற்றவளாக காணப்பட்டாள் .. 10 நிமிடம் சென்ற பின், வருத்தத்துடன் எங்களைப் பார்த்தாள் ..
“அக்கா, இன்னைக்கு கூட்டம் ஜாஸ்தி.. நான் இன்னும் சாப்பிடவில்லை.. சாப்பிடலாம்னு நினைக்கும்போது நீங்க வந்துட்டீங்க.. ஒரு 5 நிமிஷம் குடுங்க நான் சாப்டுட்டு வந்துடுறேன்” . அவள் சொல்லி முடிக்கும் போது அவளுடைய மேற்பார்வையாளர் வந்து விட்டார்..
“தங்கம் அவங்களுக்கு எடுத்து போட்டுட்டு நீ போ.. காலையிலே இருந்து அப்படி என்ன வியாபாரம் பார்த்துட்டே ” என்று கொஞ்சம் கடுமையாகவே கூறிச் சென்றார்.
அவள் பெயர் தங்கம் போலும். தங்கம் என்ற பெயர் கொண்ட அந்த மனித இயந்திரம் மறுபடியும் இயங்க ஆரம்பித்தது.. அவள் முகத்தில் களைப்பும் சலிப்பும் கொஞ்சம் கூடியிருந்தது.
“நீ வேணும்னா போயிட்டு வாம்மா. நாங்க அப்புறமா இந்த பகுதிக்கு வர்ரோம்.” , என்றேன் நான்.
“இல்லக்கா, நீங்க எடுக்காம போனா திட்டுவாங்க. கொஞ்சம் சீக்கிரமா செலக்ட் பண்ணுங்க “, என்றாள் .
"மேனேஜர் கிட்ட பேசவா ? " என்றேன். 
"இல்லக்கா.. அப்புறம் வேலைக்கே உலையாகிடும்" என்றாள் 
எனக்கு அத்தனை வேகமாக எல்லாம் துணி எடுக்க தெரியாது. ஆனாலும், அரை மனதுடன் ஒரு சுடிதாரை எடுத்துக்கொண்டு விலகினேன். அப்படியாவது அந்தப் பெண் சாப்பிடச் சென்றால் நல்லது என்று தோன்றியது. நாங்கள் அதற்கு பக்கத்தில் இருந்த பகுதிக்கு கடந்து சென்றோம்.
நாங்கள் விலகுவதற்குள் அந்த இடத்துக்கு இன்னொரு குடும்பம் வந்து நின்றது.
“கூட்டம் அதிகம் வர்ற நேரத்துல இப்படி சாப்பாடு அது இதுன்னு போனா எப்படி வியாபாரம் நடக்கும் ? முதல்ல வேலைய பாரு “, மேற்பார்வையாளர் அவளை அதட்டுவது கேட்டது.

Comments