சில மனுஷிகள் இப்படித்தான் !!

இது 90களின் கதை . இப்போது எத்தனை பேருக்கு இதன் சாரம் புரியும் என்று எனக்கு தெரியாது . எழுத வேண்டும் என்று தோன்றியது . எழுதுகிறேன்.
அன்று அவள் பிறந்த நாள். 14 வது பிறந்த நாள். காலை வேளை. அடுப்படியில் இருந்து வந்த ‘கம கம’ வென்ற நெய் வாசனை அவளை எழுப்பியது . “அம்மா கேசரியா , பாயாசமா ?” என்ற கேள்வியோடு அடுப்படிக்குச் சென்றாள் . “பிறந்த நாள் வாழ்த்துக்கள் , அனிதா ” ஒரு முத்தத்துடன் வாழ்த்து தெரிவித்தாள், அம்மா. அதைத்தொடர்ந்து அப்பா, தம்பி, பாட்டி என்று அந்த வீட்டில் இருந்த அத்தனை பேரின் வாழ்த்துக்களையும் வாங்கிக்கொண்டு பள்ளி செல்ல தயாரானாள்.
90 களில் , பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் கேசரியோடும் கோவில் அர்ச்சனையோடும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து விடும். புது உடை, கேக் வெட்டுவது எல்லாம் சற்று அரிதானவை. கொஞ்சம் பணம் அதிகம் இருந்தால், ஹோட்டலுக்கு கூட்டிச் செல்வார்கள், துணி ஒன்று எடுத்து தருவார்கள். அனிதாவின் அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்கள். பட்ஜெட் குடும்பம். ஆனால், செலவு போக கொஞ்சம் பணப்புழக்கம் உள்ள இடம்தான. அதிக விலையில் இல்லாவிட்டாலும் குறைந்த விலையிலாவது ஒரு துணி எடுக்க இயலும் . ஆனால், இதுவரை அப்படி எதுவும் அவள் பெற்றவர்கள் செய்ததாக அவளுக்கு நினைவில்லை. கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். வெளியே காட்டிக்கொள்வதில்லை.
பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில், அம்மா ஒரு கேரா மில்க் சாக்கிலேட் கவரை அவள் கையில் கொடுத்தாள். அன்றைய டிபன் பாக்சில் வடையும் பால் பாயாசமும் இடம் பெற்றிருந்தன . ஆக, அன்றைய தினம் மகிழ்ச்சியாக சென்றது .
சாயங்காலம் அப்பா , அம்மா இருவரும் பணியிலிருந்து வீடு திரும்ப நேரம் ஆனது . வழக்கம்போல், பாட்டி யாருடனோ கதை பேசிக்கொண்டிருந்தாள். அனிதாவுக்கு போர் அடித்தது. ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று தேடும்போது , ஒரு அழகான அட்டைப்படம் கொண்ட நோட்புக் சிக்கியது. குடும்ப வரவு செலவு நோட்டு போலும் . கணக்குகள் எழுதப்பட்டிருந்தன . அம்மா தான் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கிறாள். அப்பா அதிகம் தலையிடுவதில்லை .இருப்பினும், என்றாவது ஒரு நாள் கேட்டால், காண்பிப்பதற்கு என்று அந்த நோட்டு. மாத பட்ஜெட் கண்ணில் பட்டது. அனிதாவின் பிறந்த நாள் செலவு என்று 500 ரூபாய் எழுதப்பட்டிருந்தது . இது என்ன ஏமாற்று கணக்காக இருக்கிறது. கேரா மில்க் சாக்லேட்டிற்கும் பால் பாயாசத்துக்குமா 500 ரூபாய் ? கோபம் வந்தது அவளுக்கு. நோட்டை கீழே வைத்துவிட்டு நகர்ந்தாள். மனம் அந்த பணத்தைப் பற்றியும் அம்மா எதற்க்காக இப்படி பொய்க்கணக்கு எழுதினாள் என்பது பற்றியுமே சிந்தித்து . அந்த இரவு , குழப்பத்தோடு கழிந்தது .
மறுநாள் சனிக்கிழமையானதால், கொஞ்சம் தாமதமாக எழுந்தாள். வீட்டில் ஒருவரையும் காணவில்லை. அம்மாவும் வேலைக்காரியும் மட்டும் அடுப்படியில் இருப்பது தெரிந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருந்தது அனிதாவின் காதில் விழுந்தது.
“அக்கா , நீ வாங்கிக்கொடுத்த சேலைய என் பொண்ணு கிட்ட கொடுத்தேன் . அது ரொம்ப சந்தோசப்பட்டுச்சி . இப்போதான் முதன் முதல்ல புது புடவைய பாக்குது . பழசையே கட்டி அதுக்கும் சலிச்சிருக்கும் போல . இந்த சேலைய பாத்ததும் அப்படி ஒரு சந்தோசம். “
“சரி சத்தமா பேசாத. வீட்டுல இருக்கிறவங்களுக்கு இது தெரியாது. வீண் செலவுன்னு நினைப்பாங்க . தீபாவளிக்கு போனஸ் வாங்கி கொடுக்கவே ஒரு பெரிய விவாதம் நடக்கும் இங்கே. எப்படியோ என் குழந்தைங்க பிறந்த நாளுக்கு இப்படி யாருக்காவது என்னால முடிஞ்சத பண்ணிட்டு இருக்கேன் . உன் மகளுக்கு பிடிச்சிருக்கு தானே. சந்தோசம் . “
மிகவும் சாதாரணமாகச் சொன்ன தன் அம்மா மீதான மரியாதை அதிகரித்தது. ஏதோ தனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு யாருக்காவது உதவி செய்யும் தன் அம்மாவைப் பார்த்தால் வியப்பாக இருந்தது. இன்று வரை அனிதா தன் பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாடி வருகிறாள்.
சில மனுஷிகள் இப்படித்தான்.. சத்தம் காட்டாமல் உதவி விடுவார்கள்..

Comments