சில பல கேள்விகளோடு குடைந்து கொண்டு வரும் சொந்தக்கார மற்றும் பக்கத்துக்கு வீட்டு வண்டுகளுக்கு, ஆயிரக்கணக்கான ஐ.டி. ஜீவராசிகளின் பிரதிநிதியாக எழுதிக் கொள்கிறேன்.
“எங்க சித்தப்பாவோட சின்ன நாத்தனார் மகன் கலிபோர்னியாவுல இருக்குறான் ”
“எங்க பெரியப்பாவோட பெரிய கொழுந்தியாள் பொண்ணு ஆஸ்திரேலியாவிலே இருக்குறா”
“நம்ம சீனு இல்ல சீனு. வேலைக்கு சேர்ந்து ரெண்டே வருஷத்துல லண்டன் போயிட்டான் ”
“எங்க பக்கத்துக்கு வீட்டு பையன் இருக்கானே சந்துரு. அட நீ கூட பத்து வருஷம் முன்னாடி எங்க வீட்டுக்கு வந்தப்போ பாத்தியே, அவன்தான். அஞ்சு வருஷமா பிரான்ஸ் ல இருக்குறான். பத்து லட்சம் சம்பாதிக்கிறானாம் ”
இப்படி பேச்சை ஆரம்பித்தாலே…. “நீ எப்போ ஆன்சைட் போற ?” என்று கேட்கும் முன்னால் நாம் கழண்டு கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
சில பல நழுவல்களின் பின்னால் இந்த ஜீவஜந்துக்கள் என்ன செய்யும் தெரியுமா ?
”சரோஜா, உன் பையனுக்கு ஒரு வேளை திறமை பத்தலையோ ?”
“கிரிஜா , உன் பொண்ணுக்கு சரியான கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லையோ ?”
“உங்க வீட்டுக்காரருக்கு ரேட்டிங் ஒழுங்கா வரலையோ ?”
இப்படி நம்முடையோ அம்மா அப்பாவையோ, இல்லை ‘ப்ரம்மாஸ்திரமாக’ மனைவியையோ எமோஷனலாக அட்டாக் செய்யும்.
அப்போ, ஆரம்பிக்கும் இந்த ஆன்சைட் தாகம். என்னதான் அடுத்தவனுக்காக வாழக்கூடாதுன்னு மனசு சொன்னாலும் நாமளும் மனுஷங்கதானே. நமக்கும் மான ரோஷ வெக்கம் இருக்குதில்ல..
ராத்திரி பகலா வேலை பார்த்து, அப்படி பார்ப்பது மேனேஜருக்கு தெரியுமாறு ஸீன் போட்டு, ஹெச். ஆர். கிட்ட சண்ட போட்டு, என்னன்னே புரியாத பல டாக்குமென்டுகளை நிரப்பி, எம்பஸில கியூல நின்னு, பாஸ்போர்டுல ஒரு வீசா’வ குத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். சில நேரங்களில் நாம் அப்படி போகவேண்டிய நாட்டை லென்ஸ் வைத்து வேர்ல்ட் மேப்ல தேட வேண்டி இருக்கும். தலைவிதி .
குடும்பத்தை பிரிஞ்சி போற கவலை ஒரு பக்கம், போற இடம் எப்படி இருக்கும்ங்குற தவிப்பு ஒரு பக்கமா ஏர்போர்ட்ல நிக்கும்போது, இந்த ஜீவன்களை எல்லாம் என்ன செய்யலாம்னு கோபம் வரும். அதுல சில கர்ணன்கள் நாம கூப்பிடாமலே நம்மை வழியனுப்ப வந்து நிற்கும்.
இப்படியாக ரெண்டு மூணு கண்டம் , நாலஞ்சி கடல் தாண்டி வந்தப்புறமாவது நம்மள நிம்மதியா இருக்க விடுறாங்களா ? சத்தியமா இல்லை ..
“உன் பையன் அங்கேயே இருந்துராம, சரோஜா. அப்புறம் நீயும் உன் வீட்டுக்காரரும் தனியா ஆகிடுவீங்க. இப்படி எல்லாரையும் விட்டுட்டு போய் காசு சம்பாதிக்கணுமா ? ”
“உன் பொண்ணு அங்கேயே யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என்ன செய்வே ?”
“உன் புருஷன் உன்ன ஏன் கூட்டிட்டு போகல ? பார்த்தும்மா எதாவது ஏடாகூடமா ஆகிடப்போகுது”
இப்படியெல்லாம் குடும்பத்துக்குள் கேந்தியை கிளப்பிவிட்டு அடுத்த தடவ நாம் போன் பண்ணும்போது நம்ம அம்மாவோ அப்பாவோ தங்கையோ மனைவியோ ” நீ எப்போ திரும்பி வருவே ? உன்ன பாக்கணும்போல இருக்கு ” ன்னு சொல்லி அழ ஆரம்பிப்பாங்க.
“உங்க தாத்தாவா கம்பெனி நடத்துறாரு ? நீங்க வான்னா வர்றதுக்கும் போன்னா போறதுக்கும் ? ” திட்ட முடியாமல் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு
“ஹாங்.. சரிம்மா.. பாக்குறேன்” என்று சொல்லி சமாளிக்க வேண்டி வரும்.
அப்புறம், அடுத்த வாரமே யார் இந்த எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது என்று தெரிய வரும். தெரிந்து மட்டும் என்ன பிரயோஜனம் ?
இதுல ஹைலைட் என்ன தெரியுமா ?
லீவுக்கு ஊருக்கு போகும்போது இதில் சில ஜீவராசிகள் நம்மை பார்த்து சொல்லும் அட்வைஸ் தான்.
” சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ? இந்தியாதான்பா பெஸ்டு .. இங்க படிச்சிட்டு ஏன் வேற நாட்டுல வேல பாக்கணும் ? சீக்கிரமே இந்தியா வந்துரு.. புரியுதா ? தாய்நாட்டையும் தாயையும் பிரிஞ்சி ரொம்ப நாள் இருக்கக்கூடாதுப்பா ..”
நானாய்யா போனேன்.. போகலையா போகலையான்னு கேட்டு நீங்கதானய்யா துரத்தி விட்டீங்க !!!!
Comments
Post a Comment